சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ. போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சி நியமித்துள்ளது. இதில், போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ., தமிழகத்தில் 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ. துணைத் தலைவர்கள் டால்பின் ஸ்ரீதர், ராமலிங்கம், வெங்கடேசன், மாநில பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் ராகவன் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிட சீட் எதிர்பார்த்தனர். ஆனால், இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதனால் ஏற்பட்ட அதிருப்தியை சமாளிக்கும் வகையில், போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதவவும், கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், இந்நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, தளி தொகுதிக்கு ராமலிங்கம், மொடக்குறிச்சி தொகுதிக்கு கனகசபாபதி, திருவண்ணாமலைக்கு டால்பின் ஸ்ரீதர், வாசுதேவநல்லூருக்கு பால் கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆவடி தொகுதிக்கு வெங்கடேசன், பாஸ்கர்; அறந்தாங்கிக்கு கார்த்தியாயினி; மயிலாப்பூருக்கு பிரமிளா சம்பத் மற்றும் சதீஷ்குமார்; ராசிபுரத்திற்கு கே. வெங்கடேசன் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை தெற்கு தொகுதிக்கு ராகவன்; கந்தர்வகோட்டை நாச்சியப்பன்; தஞ்சைக்கு நாகராஜ்; திருப்பூர் தெற்கு அர்ஜுனமூர்த்தி; சாத்தூருக்கு ராதாகிருஷ்ணன் மற்றும் நீலமுரளி யாதவ்; திருச்செந்தூருக்கு உமாரதி ஆகியோரும் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், சீட் கிடைக்காத நிர்வாகிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி, கட்சியின் செயல்பாட்டை வலுப்படுத்தும் முயற்சியாக பா.ஜ. இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
