வாஷிங்டன்: தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் பிறந்த ரினி சம்பத், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் மேயர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
வாஷிங்டன் மேயர் தேர்தல் வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன், ஜூன் மாதத்தில் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் முன்னோட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் ரினி சம்பத் போட்டியிடுகிறார். இந்த போட்டிக்காக தேவையான 4,500 கட்சி பிரதிநிதிகளின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார்.
ரினி சம்பத் 7 வயதாக இருக்கும்போதே, அவரது பெற்றோர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். அதன் பின்னர் அங்கேயே வளர்ந்த அவர், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் தேசிய கல்லூரி தலைமை கவுன்சிலில் கொள்கை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
அதன்பின், அமெரிக்க அரசு நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் முன்னணி மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தில் மூத்த ஆலோசகராக பணியாற்றினார்.
கடந்த 50 ஆண்டுகளாக வாஷிங்டன் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரினி சம்பத் போட்டியிடுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
