திருச்சி: தனது மீது ஒரு வழக்குகூட இல்லாத விஜய், வலிகளை தாங்கி கொண்டு அரசியலுக்கு வந்ததாக கூறுவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தின் கடன் நிலை குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய கருத்துகளையும் விமர்சித்தார்.
தமிழகத்திற்கு பத்தரை லட்சம் கோடி கடன் இருப்பதாக கூறுவது இப்போது தான் அவருக்கு தெரிய வந்ததா என்று கேள்வி எழுப்பிய சீமான், இந்தியாவே பெரும் கடன் சுமையில் உள்ளதாக குறிப்பிட்டார். பா.ஜ., ஆளும் மாநிலங்களிலும் கடன் இருப்பதாகவும், மொத்த மாநில கடன் தொகை மிக அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஊழல் உள்ளது என்று பா.ஜ. கூறுவது சரியா என கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவை முன்பு ஊழல் கட்சி என கூறிய பா.ஜ., தற்போது அதே கட்சியுடன் கூட்டணி அமைத்திருப்பதை விமர்சித்தார்.
மேலும், விஜய் குறித்து பேசுகையில், “தன் மீது ஒரு வழக்குகூட இல்லாதவர், எந்த வலியை தாங்கினார்? நான் 261 வழக்குகளை சந்தித்துள்ளேன். நான் செல்லாத நீதிமன்றமும் இல்லை; அடைக்கப்படாத சிறையும் இல்லை,” என்று கூறினார்.
நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட பிரச்னைகளை தான் உண்மையான வலியாக கருதி அதை சமாளிக்க வருபவர்தான் தலைவன் என்றும், தனிப்பட்ட சிரமங்களை வலியாக கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மக்கள் ஆதரவால் தான் தனது கட்சி வலுவடைந்ததாகவும், குறைந்த வாக்குகளிலிருந்து அதிக வாக்குகள் பெறும் நிலைக்கு உயர்ந்திருப்பது மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுகிறது என்றும் சீமான் கூறினார்.
