வேலூர்: தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் சிறுவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தேர்தல் ஆணைய விதிகளின்படி, குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அமைச்சர் துரைமுருகனின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், அரசு பள்ளி மாணவர்கள் “காட்பாடி என்றாலே துரைமுருகன் ஐயா தான்” மற்றும் “வாக்களிப்பீர் உதயசூரியன்” போன்ற வாசகங்களுடன் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தில், இரண்டு சிறுவர்கள் திமுக கொடி மற்றும் பதாகைகளுடன் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
இதேபோன்று, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ரேவதியின் பிரசாரத்தில் ஏழு சிறுவர்கள் பதாகைகளுடன் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, தர்மேந்திரன் என்ற நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
