தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை இழுபறியாக இருந்த பாஜ வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப்ரல் 3) வெளியிடப்பட்டது.
மொத்தம் 27 தொகுதிகளில் பாஜ தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதில், மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை, அவிநாசியில் மத்திய அமைச்சர் எல். முருகன், கோவை வடக்கில் வானதி சீனிவாசன், நாகர்கோவிலில் எம்.ஆர். காந்தி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.
திருப்பூர் தெற்கு தொகுதியில் தங்கராஜ், ராசிபுரத்தில் பிரேம்குமார், மொடக்குறிச்சி தொகுதியில் கிருத்திகா சிவக்குமார் உள்ளிட்ட புதிய முகங்களும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், தென்னிந்திய பார்வர்டு கட்சியைச் சேர்ந்த திருமாறனுக்கு திருப்பத்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பாஜ சின்னத்தில் போட்டியிட உள்ளார்.
திருப்பூர் தெற்கு வேட்பாளர் தங்கராஜ், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல், ராசிபுரம் வேட்பாளர் பிரேம்குமார், பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி. துரைசாமியின் மகன் ஆவார்.
ஊட்டி தொகுதியில் போட்டியிடும் போஜராஜன், கடந்த தேர்தலில் இதே தொகுதியில் தோல்வியடைந்தவர். மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் கிருத்திகா சிவக்குமார், தற்போதைய எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகள் ஆவார்.
இந்த பட்டியல் வெளியீட்டுடன், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.
