Puducherry: சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட, Narendra Modi இன்று (ஏப். 3) புதுச்சேரியில் ரோடு ஷோ பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பிறகும் மீண்டும் என்டிஏ ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, மார்ச் 30ஆம் தேதி காணொலி வாயிலாக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் உரையாடிய மோடி, புதுச்சேரியில் “இரட்டை என்ஜின் ஆட்சி” சிறப்பாக செயல்படுகிறது என்றும், மீண்டும் ஆட்சி அமைக்க மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில், டெல்லியிலிருந்து சென்னை வருகை புரியும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாலை 4 மணியளவில் புதுச்சேரி செல்கிறார்.
அங்கு அஜந்தா சந்திப்பில் இருந்து தொடங்கி சுமார் 1.7 கி.மீ தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்.
இதையொட்டி, நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், அந்த பகுதிகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதுடன், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. சட்டம்-ஒழுங்கை பேணுவதற்காக நிர்வாக மாஜிஸ்திரேட்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 1,500 போலீஸாரும், மத்திய துணை ராணுவப்படை 20 கம்பெனிகள் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
