காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என தெரிந்ததால், தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியதாக தகவல் வெளியானது.
அதற்கான ராஜினாமா கடிதத்தை டில்லி கட்சி மேலிடத்திற்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. ஆனால் பின்னர், “நான் ராஜினாமா செய்யவில்லை” என அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில், மாணிக்கம் தாகூர் வெளியிட்ட வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “தேவையில்லாத குழப்பம் உருவாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு என்னால் எந்த சிரமமும் வரக்கூடாது என்பதே என் நிலை. எனக்கு வழங்கப்பட்டிருந்த சில பொறுப்புகள் மாநில அளவிலானவை. அந்த பொறுப்பில் தொடர விரும்பவில்லை” என்று கூறினார்.
மேலும், இந்த முடிவை கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தெரிவித்ததாகவும், மார்ச் 28ஆம் தேதி இரவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இதில் வேறு எந்த குழப்பமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
