பிலாஸ்பூர்: சத்தீஸ்கரில் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் ராமவதார் ஜக்கி படுகொலை வழக்கில், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகியை சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் இருந்து 2000ஆம் ஆண்டு சத்தீஸ்கர் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் 2000 முதல் 2003 டிசம்பர் வரை காங்கிரஸ் கட்சி சார்பில் அஜித் ஜோகி அந்த மாநிலத்தின் முதல் முதல்வராக பதவி வகித்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் என்ற கட்சியை துவங்கினார்.
அவர் முதல்வராக இருந்த காலத்தில், 2003 ஜூன் 4ஆம் தேதி ராய்பூரில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ராமவதார் ஜக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அப்போது தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் வி.சி. சுக்லாவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டதால், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் முதலில் மாநில போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 2003 டிசம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்து, பாஜக ஆட்சிக்கு வந்ததும், 2004 ஜனவரியில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ., முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகிக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பதை கண்டறிந்தது. இதையடுத்து மொத்தம் 29 பேருக்கு எதிராக ராய்பூர் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், 2007 மே 31ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், 28 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகவும், அமித் ஜோகி மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. தரப்பில் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டதாக 2011ஆம் ஆண்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாநில அரசு மற்றும் ராமவதார் ஜக்கியின் மகன் சதீஷ் ஜக்கி தாக்கல் செய்த மேல்முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், “அமித் ஜோகியின் விடுதலையை எதிர்த்து புதிய மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும்” என உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் குற்றப்பத்திரிகைகளை பரிசீலித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி அர்விந்த் குமார், அமித் ஜோகியை விடுவித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அவரை குற்றவாளி என அறிவித்தனர்.
மேலும், மூன்று வாரங்களுக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
