சென்னை: தேர்தல் விதி மீறியதாக நடிகர் Vijay மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான காரணம் தெளிவாக சொல்லப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் Seeman கேள்வி எழுப்பினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “களத்தில் நிற்கும் விஜய்க்கு தான் என்ன குறைபாடு என்பதை தெரியும். ஆனால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் என்ன காரணம் கூறியுள்ளது என்பது தெரியவில்லை. 5 பிரிவின் கீழ் வழக்கு என்றால் அதற்கான காரணம் தெளிவாக இருக்க வேண்டும். அப்படி ஏதேனும் காரணம் கூறப்பட்டுள்ளதா?” என கேட்டார்.
மேலும், “என்னை எடுத்துக்கொண்டால், நான் போலீசாரிடம் பாதுகாப்பு கோருவதில்லை. அதற்கான எதிர்பார்ப்பும் இல்லை. அதனால் எனக்கு பிரச்னை இல்லை. விஜய்க்கு என்ன பாதுகாப்பு குறைபாடு உள்ளது என்பதை அவரே விளக்க வேண்டும். நான் வேறு களத்தில் இருப்பதால் அதைப் பற்றி தெரியாது,” என்றார்.
அதனைத் தொடர்ந்து சமூக நிலை குறித்து விமர்சித்த அவர், “டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்து மக்களை குடிப்பழக்கத்திற்கு உட்படுத்தி, குற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் அளவிற்கு மனிதர்களின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண நிலை இல்லை. குடி நோயாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர்,” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “இஸ்லாமியர்களின் வாக்குகளை தக்க வைத்துக்கொள்ள பலரையும் ‘பி டீம்’ என கூறுகின்றனர். தமிழ்நாட்டில் பாஜக வளர திமுகவே காரணம். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பாதகமான நிலை. நான் தூய தமிழர் சமூகத்தை உருவாக்கப் போகிறேன்,” எனவும் சீமான் தெரிவித்தார்.
