புதுடில்லி: பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முதல்வர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக மேற்காசிய பிராந்தியத்தில் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
மேற்காசிய போர் சூழலை சமாளிப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினார். அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்கள் தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் இதில் பங்கேற்றனர்.
எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மாநில அரசால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, இக்கட்டான இந்த நேரத்தில் அனைவரும் ‘டீம் இந்தியா’ என்ற ஒரே அணியாக ஒருங்கிணைந்து செயல்படும்போது, தேசம் வெற்றிகரமாக மீண்டு வர முடியும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரத்தை பராமரிப்பதுடன், வர்த்தக ஸ்திரத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல், குடிமக்களின் நலன்களை பாதுகாத்தல் மற்றும் தொழில்துறை, வினியோக சங்கிலியை பலப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என கூறினார்.
வினியோக சங்கிலி சுமூகமாக செயல்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்வதுடன், பதுக்கல்காரர்கள் மற்றும் அதிக லாபம் நோக்கில் செயல்படுபவர்களுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
விவசாயத்துறையில் முன்கூட்டியே திட்டமிடுவதுடன், உரம் சேமிப்பு மற்றும் விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினார்.
மாறி வரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விரைவாக செயல்படுவதை உறுதி செய்ய அனைத்து நிலைகளிலும் வலுவான ஒருங்கிணைப்பு தேவை என்றும், கப்பல் போக்குவரத்து, கடலோர பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க எல்லையோரம் மற்றும் கடலோர மாநிலங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவது குறித்து எச்சரித்த அவர், துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்கள் பரவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
மேற்காசிய போருக்கு பிறகு உருவான சூழ்நிலைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திறம்பட கையாண்டு வரும் மத்திய அரசுக்கு முதல்வர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அவர்கள், மாநிலங்களுக்கு வணிக ரீதியிலான சிலிண்டர் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போதுமான அளவு பெட்ரோல், டீசல், எல்பிஜி கையிருப்புடன் சூழ்நிலை சுமூகமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், சூழ்நிலையை திறம்பட சமாளிக்க மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதி அளித்தனர்.
