புதுடில்லி: நாட்டில் நாச வேலைகளை நடத்த சதித் திட்டம் தீட்டி வந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி ஷபீர் அகமது லோன் என்பவரை டில்லி போலீசார் கைது செய்தனர்.
டில்லியின் பல பகுதிகளில் சமீபத்தில் தேச விரோத போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வங்கதேசத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்த வழக்கில் கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டின் திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினருடன் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, டில்லி போலீசார் திருப்பூருக்கு வந்து, சட்டவிரோதமாக தங்கி இருந்த ஏழு வங்கதேசத்தினரை கைது செய்தனர். அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை ஆய்வு செய்ததில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஷபீர் அகமது லோன் என்பவருடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியாக செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
வங்கதேச இளைஞர்களை மூளைச்சலவை செய்து, இந்தியாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள திட்டமிட்டது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, கூடுதல் கமிஷனர் பிரமோத் குஷ்வாஹா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியாக, உத்தரப் பிரதேசத்தின் காஜிபூரில் ஷபீர் அகமது லோன் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் இவர் செயல்பட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
