காங்டாக்: இடைவிடாத கனமழையால் ஏற்பட்ட தொடர் நிலச்சரிவுகளால் வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங் பகுதியில் சாலைப் போக்குவரத்து தடைபட்டதால், சுற்றுலா பயணிகள் 200 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. முக்கிய சுற்றுலா தலமான லாச்சென் – சுங்தாங் சாலையில் உள்ள முன்ஷிதாங் பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த சாலையில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வடக்கு சிக்கிமில் உள்ள சுங்தாங் பகுதியில் சுற்றுலா பயணிகள் 200 பேர் சிக்கியுள்ளனர்.
மீட்பு நடவடிக்கையாக, நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகள் சுங்தாங்கில் இருந்து மங்கன் பகுதிக்கு அங்குள்ள பெய்லி பாலம் வழியாக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் தலைநகர் காங்டாக் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், அப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல மாநில அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. நிலைமையை ஆய்வு செய்த பின், மீண்டும் அனுமதி வழங்கப்படும் என சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது.
