வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கப் போவதில்லை என ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர், மூன்று வாரங்களாக நீடித்த போரில் அமெரிக்கா முன்னிலை பெற்றதாகவும் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் அமெரிக்காவுக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஈரான் தற்போது ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இரு தரப்புகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தைகளை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கு சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப் மற்றும் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், அமெரிக்க ராணுவத்தின் திறனை குறிப்பிட்டு, ஈரானின் வான்பரப்பில் தடை இல்லாமல் செயல்பட முடியும் என்றும், தங்களின் ராணுவ வலிமை மிக அதிகம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஈரான் ராணுவ ரீதியாக பலவீனமடைந்துள்ளதாகவும், அவசியமெனில் அதன் முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்த முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஈரானை முழுமையாக நம்ப முடியாது என்றும், எந்த முடிவுகளையும் எச்சரிக்கையுடன் அணுகுவோம் என்றும் அவர் கூறினார்.
