வேலூர்: திமுகவில் சீட் பங்கீடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். கருணாநிதியின் மகள் கனிமொழிக்கே சீட் வழங்கப்படவில்லை என்றால், கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எப்படி கூடுதல் சீட்கள் வழங்கப்படும் என அவர் கேள்வி எழுப்பினார்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டியபோது அவர் இவ்வாறு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கனிமொழி திறமைமிக்க தலைவர் என்றும், அவரை மாநில அரசியலிலிருந்து விலக்குவதற்கு உள்கட்சியிலேயே அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றும் கூறினார்.
மேலும், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் தாக்கம் செலுத்தியவர் என்றும், சமூக நீதி குறித்து பேச அவரை விட பெரியவர்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடி கூறியுள்ள எரிபொருள் பற்றாக்குறை எச்சரிக்கையை குறிப்பிட்டு, “பெட்ரோல், டீசல் இல்லாத நிலை வந்தால் சைக்கிளில் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்” என்றும், தானும் சைக்கிளில் சென்று வாக்கு கேட்க தயாராக இருப்பதாகவும் நகைச்சுவையாக கூறினார்.
பிரசார கூட்டத்தில் மேலும் பேசிய அவர், கால்நடை வளர்ப்பு தொழிலை இகழ்ந்து பார்க்கக் கூடாது என்றும், கிருஷ்ணர், இயேசு, நபிகள் நாயகம் போன்றோர் கூட மாடுகளை மேய்த்தவர்கள் என எடுத்துக்காட்டினார்.
மேலும், தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதால் அரசுக்கு பெரிய அளவில் கடன் ஏற்பட்டுள்ளதாகவும், மின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்யாமல் இருப்பது லாப நோக்கத்திற்காகவே என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
