புதுடில்லி: மேற்காசியாவில் நீடித்து வரும் போர் சூழ்நிலையை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இஸ்ரேல்–ஈரான் மோதல் நான்காவது வாரமாக நீடித்து வருவதால், உலகளாவிய கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரு நாடுகளின் தலைவர்களும் நிலைமையை விரிவாக ஆய்வு செய்தனர்.
இந்த தகவலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். அவரது கூறுகையில், உலகளாவிய எரிபொருள் வினியோகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு குறித்து இருவரும் முக்கியமாக பேசினர்.
குறிப்பாக, உலக எரிசக்தி பாதுகாப்புக்கு முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை எப்போதும் திறந்து வைத்திருப்பதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
மேலும், இந்த உரையாடலை பிரதமர் மோடியும் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேற்காசிய பகுதியில் விரைவில் அமைதி ஏற்பட இந்தியா முழு ஆதரவு அளிக்கும் எனவும், ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு உலக நாடுகளுக்கு மிகவும் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளின் கவனம் ஹார்முஸ் ஜலசந்தி மீது திரும்பியுள்ள நிலையில், இந்தியா–அமெரிக்கா இடையேயான இந்த ஆலோசனை புவிசார் அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
