தூத்துக்குடி: வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணி பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர் உதவியாளர் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜவை சேர்ந்த முன்னாள் நிர்வாகி வெற்றிவேல், மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோவிலில் திருப்பணி என்ற பெயரில், ‘ஸ்ரீ வைகுண்டபதி கைங்கரிய டிரஸ்ட்’ மூலம் பக்தர்களிடமும் பொதுமக்களிடமும் பல கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் ஸ்தபதியுடன் ₹3.25 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்து, ₹3.05 கோடி வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கான பணிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி தூண்கள் வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உபயதாரர்கள் விலகியதால் திருப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்குப் பிறகும் பக்தர்களிடமிருந்து நிதி வசூல் செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கிறது.
இந்த முறைகேட்டில், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அமைச்சர் கீதா ஜீவனின் உதவியாளரான செந்தில்குமார், டிரஸ்ட் பொருளாளர் இளங்குமரன், கோவில் செயல் அலுவலர் தமிழ்செல்வி, அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி உள்ளிட்டோர் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் மீது முழுமையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த புகாரை பெற்ற போலீசார், மனு ரசீது வழங்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
