மதுரை: சாத்தான்குளம் தந்தை–மகன் மரணம் தொடர்பான வழக்கில், இன்ஸ்பெக்டர் உட்பட 9 போலீசாரையும் குற்றவாளிகளாக மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 அன்று அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், 2020 ஜூன் 19 அன்று, ஊரடங்கு நேரத்தை மீறி கடை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் (63) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். காவலில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும், ஜூன் 22 மற்றும் 23 தேதிகளில் உடல்நிலை பாதித்து அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். பின்னர் வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில் சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கொரோனா காரணமாக இறந்தார்.
இந்த வழக்கில் பலமுறை ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
நீதிபதி முத்துக்குமரன் வழங்கிய தீர்ப்பில், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், சட்டவிரோதமாக காவலில் வைத்து பலமுறை தாக்கப்பட்டதால் அவர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், “இத்தகைய துன்புறுத்தல் விசாரணை முறைகள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தவை; அவை இன்றும் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது” என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 அன்று அறிவிக்கப்படும்.
மேலும், குற்றவாளிகளின் சொத்து விவரங்கள், சம்பள விவரங்கள், நன்னடத்தை சான்றுகள் உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களின் உடல் மற்றும் மனநிலை குறித்த மருத்துவ அறிக்கைகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தீர்ப்புக்கு பின், குற்றவாளிகள் மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஜெயராஜின் மகள் பெர்சி கூறுகையில், “எங்கள் தந்தை மற்றும் சகோதரரின் மரணத்திற்கு நீதி கிடைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என நம்புகிறோம்” என்றார்.
