சூலூர்: மேற்கு மண்டலம் எப்போதும் திமுகவின் கோட்டையாகும் என்பதை நிரூபிக்க கடுமையாக உழைக்க வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே முதலிபாளையத்தில் நடைபெற்ற இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியார். இந்த கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பேச்சின் போது, “கடந்த லோக்சபா தேர்தலில் ‘களத்தில் இளைஞரணி’ என்ற வாசகத்துடன் செயல்பட்டு 100 சதவீத வெற்றியை பெற்றோம். அதேபோல், வரும் சட்டசபை தேர்தலிலும் முழு வெற்றியைப் பெற வேண்டும்” என்றார்.
மேலும், “யாரோ கோவையை தங்கள் கோட்டை என கூறுகின்றனர். ஆனால் மேற்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். வீடு தோறும் சென்று பிரசாரம் செய்ய வேண்டும்” என வலியுறுத்தினார்.
“தேர்தல் என்பது ஜனநாயகப் போர். அதற்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடைசி நேரம் வரை தீவிரமாக செயல்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, தேர்தல் வெற்றிக்கு பின் மகளிர் உரிமைத் தொகை ₹2000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதாகவும், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய பாஜ அரசு தமிழகத்திற்கு நிதி வழங்க மறுக்கிறது என்றும், அதிமுக தலைவர்கள் டெல்லியில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் விமர்சித்தார்.
“எத்தனை அணிகள் வந்தாலும் திமுக தான் சாம்பியன். மீண்டும் ஸ்டாலின் முதல்வராக வருவது உறுதி” என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், “அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு செயல்பாடுகளையும், திமுக ஆட்சியின் 5 ஆண்டு சாதனைகளையும் ஒப்பிட்டு மக்களிடம் விளக்க வேண்டும். பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்; சிறிய தவறும் எதிராக பயன்படுத்தப்படும்” என அறிவுறுத்தினார்.
அடுத்த 32 நாட்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், உழைப்போருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
