புதுச்சேரி: புதுச்சேரியில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் பல தொகுதிகளில் போட்டி போட்டு மனு தாக்கல் செய்துள்ளன. இது ‘இண்டி’ கூட்டணியில் குழப்பம் நீடிப்பதை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, புதுச்சேரியிலும் கூட்டணி தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கு கூட்டணிக்கு தலைமை ஏற்கும் விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால், பேச்சுவார்த்தைகள் நேரடியாக கட்சித் தலைமையகங்களில் நடைபெறாமல், ஹோட்டலில் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில், 30 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு, மீதமுள்ள 13 தொகுதிகளை திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதை திமுக ஏற்க மறுத்தது.
இதன் பின்னர், கடந்த 18ம் தேதி முதல் இரு கட்சிகளும் தனித்தனியாக வேட்பு மனு தாக்கல் செய்யத் தொடங்கின. நீண்ட இழுபறிக்குப் பிறகு, காங்கிரசுக்கு 16, திமுகக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி. கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என இடஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டது.
அதன்பின், எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பது குறித்து மீண்டும் மோதல் ஏற்பட்டது. கடந்த தேர்தலில் திமுக போட்டியிட்ட தொகுதிகளை காங்கிரஸ் கோரியதால், திமுக தரப்பினர் அதிருப்தியுடன் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், மனு தாக்கல் இறுதி நாளான நேற்று, திமுக இதுவரை மனு தாக்கல் செய்யாத தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மனு தாக்கல் செய்தது. அதேபோல், காங்கிரஸும் பல தொகுதிகளில் மனு தாக்கல் செய்தது.
மேலும், சில வேட்பாளர்கள் தங்கள் மனுக்களுடன் கட்சியின் அதிகாரப்பூர்வ ‘ஏ’ மற்றும் ‘பி’ படிவங்களையும் இணைத்திருப்பது, கூட்டணியில் குழப்பம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக காட்டுகிறது.
இரு கட்சிகளும் இறுதியாக உடன்பாடு எட்டி, மனுக்களை திரும்பப் பெறாவிட்டால், திமுக மற்றும் காங்கிரஸ் நேரடியாக போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.
