புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் போர் சூழ்நிலை இந்தியாவுக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை உருவாக்கியுள்ளது. இதனை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், உலகளவில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து லோக்சபாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த போர் இந்தியாவுக்கு பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமானம் உள்ளிட்ட பல துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.
இந்த பிராந்தியம் சர்வதேச வர்த்தகத்திற்கும், எரிசக்தி விநியோகத்திற்கும் முக்கியமானது என்பதால், அங்கு ஏற்படும் எந்த இடையூறும் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போர் நிலைமை குறித்து, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி ஆகியோர் சபையில் விளக்கம் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் நேரடியாக பேசி, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியதாகவும், “போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல” என தெரிவித்தார்.
மேற்காசியாவில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வசித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பு அரசின் முதன்மை கவனம் எனவும் அவர் கூறினார். இதுவரை 3.75 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
எரிசக்தி விநியோகத்தில் தடையில்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 53 லட்சம் டன் அளவுக்கு கையிருப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாடு தற்போது 41 நாடுகளில் இருந்து எரிசக்தி இறக்குமதி செய்து வருகிறது என்றும், முன்பு இருந்ததை விட அதிக பரவலான வினியோக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், “இந்த சவால்களை எதிர்கொள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். கள்ளச்சந்தை மற்றும் வதந்திகளை பரப்புவோரை அனுமதிக்கக் கூடாது” எனவும் எச்சரித்தார்.
“கொரோனா காலத்தில் போல, இந்த நெருக்கடியையும் நாம் ஒன்றிணைந்து சமாளிக்க வேண்டும்” என பிரதமர் மோடி கூறினார்.
