சென்னையில், தமிழக வாழ்வுரிமை கட்சி (த.வா.க.) தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், தமது கட்சி தமிழ்நாடு விடுதலைப்படை, மாவோயிஸ்ட் இயக்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளை உள்ளடக்கிய அரசியல் தலைமை குழுவை கொண்டதாகவும், தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்றும் கூறினார்.
தி.மு.க.க்கு குறைந்தபட்ச செயல்திட்ட அடிப்படையில் ஆதரவு அளித்ததாகவும், ஆனால் தாம் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அக்கட்சி தயக்கம் காட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு போன்ற முக்கிய கோரிக்கைகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.
பரந்தூர் விமான நிலையம் தொடர்பாகவும், சில அமைச்சர்கள் நிலங்கள் வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்பான தகவல்கள் தமக்கு உள்ளதாகவும், அவற்றை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவேன் என்றும் கூறினார்.
தேர்தலில் மூன்று தொகுதிகள் மட்டுமே கேட்டதாகவும், வேறு கூட்டணியில் அதிக இடங்கள் பெறும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.
பா.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
இனி, தாம் முன்வைத்த 10 கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் அணியுடன் இணைந்து தேர்தலை சந்திப்பது குறித்து விரைவில் அறிவிப்பேன் என வேல்முருகன் கூறினார்.
