சென்னையில், ரஷ்யா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகம் வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இன்னொரு கப்பல் 24ஆம் தேதி வரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், அந்த வழியாக பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், மாற்று நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, ரஷ்யாவின் நகோட்கா துறைமுகத்தில் இருந்து ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது.
இதுகுறித்து சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமாக மாதத்திற்கு நான்கு கப்பல்களில் சுமார் 10 லட்சம் டன் கச்சா எண்ணெய் கொண்டு வரப்படுகிறது. தற்போது சென்னை துறைமுகத்தில் 6.50 லட்சம் டன் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது.
மேலும், 24ஆம் தேதி மேலும் ஒரு லட்சம் டன் கச்சா எண்ணெய் கொண்ட கப்பல் வரவுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இன்னும் இரண்டு கப்பல்கள் வர உள்ளன.
இதனால், சென்னை துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
