புதுடில்லியில் காங்கிரஸ் எம்பி சசி தரூர், மேற்கு ஆசியா மற்றும் பிற பகுதிகளில் நடைபெறும் மோதல்களில் தாம் எப்போதும் அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளித்து வருவதாக தெளிவுபடுத்தியுள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் நடத்தி வரும் போர் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு அவர் முன்பு ஆதரவு தெரிவித்திருந்தார். “இந்த விவகாரத்தில் மத்திய அரசு மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல; அது சிறந்த ராஜதந்திரம்” என அவர் கூறியிருந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அவர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
இந்த சூழலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு ஆசியா அல்லது பிற மோதல்களில் நான் எப்போதும் அமைதியை விரும்புவோருக்கே ஆதரவளித்து வந்துள்ளேன். போர் என்பது தேவையற்ற ஒன்று.
ஐக்கிய நாடுகள் சபையில் அமைதி காக்கும் பணிக்காக பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் எனக்குள்ளது. போரின் உண்மையான விளைவுகள் என்ன என்பதை வீரர்கள் நன்கு அறிந்துள்ளனர். போரில் ஈடுபட்டவர்களிடம் பேசும்போது, அதனால் ஏற்படும் துயரம் மற்றும் மனவேதனையை அவர்கள் வெளிப்படுத்துவார்கள்.
ஒரு நாட்டை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் வேறொரு விஷயம். ஆனால் அப்பாவி மக்கள், குறிப்பாக குழந்தைகள் உயிரிழக்கும் வகையில் போரை தொடர்ந்து நடத்துவது முற்றிலும் ஏற்க முடியாதது.
தற்போதைய சூழலில், இந்த போர் அண்டை நாடுகள் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஏற்றுக்கொள்ளக்கூடிய எல்லைகளை கடந்துவிட்டது. எனவே, இந்த போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என சசி தரூர் வலியுறுத்தினார்.
