புதுடில்லி: மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தை குறைத்து அமைதியை நிலைநிறுத்த பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வாகும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் மோதலால் மேற்காசியாவில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.
இந்த உரையாடல் குறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில், இரு நாடுகளும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க பேச்சுவார்த்தை அவசியம் என ஒருமித்த கருத்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஓமன் நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் நடைபெற்ற தாக்குதலை இந்தியா கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், இந்தியர்கள் உள்ளிட்ட பலரை பாதுகாப்பாக வெளியேற்ற ஓமன் அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதில் இந்தியா மற்றும் ஓமன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனுடன், பிரான்ஸ் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு தற்போதைய நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
