பிரஸ்ஸல்ஸ்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடங்கியுள்ள ஈரான் தொடர்பான போரை நிறுத்துவதற்கு இதுவே சரியான நேரம் என ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 28ஆம் தேதி முதல், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கமாக எரிவாயு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆன்டோனியோ குட்டரெஸ், இந்த போர் கட்டுப்பாட்டை மீறி செல்லும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார்.
இந்த தாக்குதல்களால் அப்பாவி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த போரின் விளைவுகள் போர்க்களத்தைத் தாண்டி உலகளாவிய அளவில் பரவி வருவதாகவும் கூறினார்.
உலக பொருளாதாரம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இந்த நிலைமை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
போருக்கு பதிலாக, தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டிய நேரம் இது எனவும் அவர் வலியுறுத்தினார்.
