மும்பை: பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் குடும்பத்திற்கு சொந்தமான 4 சொத்துகள், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த நிலையில், 5வது முறையாக நடைபெற்ற ஏலத்தில் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டன.
1993ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்ததுடன், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவனை ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறதுடன், பாகிஸ்தான் அவன் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பின்னர், தாவூத் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்துகள் மத்திய அரசால் பறிமுதல் செய்யப்பட்டன. பல சொத்துகள் ஏலத்தில் விற்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டம் மும்பகே கிராமத்தில் உள்ள 4 விவசாய நிலங்கள் மட்டும் விற்பனை ஆகாமல் இருந்தன. இந்நிலங்கள் தாவூத்தின் தாயார் அமீனா பீவி பெயரில் இருந்தன.
2017, 2020, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் இந்த நிலங்களை ஏலம் விட முயற்சி செய்யப்பட்டும், பல்வேறு காரணங்களால் அது சாத்தியமாகவில்லை. கடந்த நவம்பர் மாதம், நிலங்களின் அடிப்படை விலை 30% குறைக்கப்பட்டபோதும், விற்பனை நடைபெறவில்லை.
இந்நிலையில், இன்று மீண்டும் SAFEMA சட்டத்தின் கீழ் ஏலம் நடத்தப்பட்டது. இதில் 9.41 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம் முதலில் ஏலத்திற்கு வந்தது. மும்பை மற்றும் ரத்னகிரியை சேர்ந்த இருவர் போட்டியிட்ட நிலையில், மும்பையை சேர்ந்தவர் 10 லட்ச ரூபாய்க்கு அந்த நிலத்தை கைப்பற்றினார்.
மீதமுள்ள மூன்று நிலங்களும் முறையே 2.33 லட்சம், 8.08 லட்சம் மற்றும் 15,440 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலங்களையும் மும்பையை சேர்ந்தவர்களே ஏலத்தில் எடுத்துள்ளனர். ஏலத்தில் வென்றவர்கள் ஏப்ரல் மாதத்திற்குள் முழு தொகையை செலுத்திய பிறகு, நில உரிமை அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் முழுமையாக ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
