புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் இடையே பதற்றம் நிலவிய நிலையில், ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கு நடைபெற்ற பிரிவு உபச்சார உரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ராஜ்யசபாவில் சிரிப்பான சூழல் நிலவியது.
20 மாநிலங்களைச் சேர்ந்த 59 எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுவதையடுத்து நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பிரதமர் மோடி தனது உரையில், அரசியலில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை; அனுபவமிக்க எம்.பி.க்களின் பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும் எனக் கூறினார். மேலும், புதிய எம்.பி.க்கள் மல்லிகார்ஜுன கார்கே, தேவகவுடா, சரத் பவார் போன்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, முன்னாள் பிரதமர் தேவகவுடாவைப் பற்றி நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
அவர், “தேவகவுடா எங்களுடன் இருந்தார், எங்களை நேசித்தார், எங்களை காதலித்தார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியாது, அவர் மோடியைத் திருமணம் செய்துகொண்டார்” என கூறினார்.
இந்தக் கருத்து வெளிப்பட்டவுடன் ராஜ்யசபா முழுவதும் சிரிப்பில் மூழ்கியது. அங்கு இருந்த பிரதமர் மோடியும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார்.
இதனால், நீண்ட நாட்களுக்கு பின் இரு தரப்பினரும் இணக்கமான சூழலில் கலகலப்பாக இருந்த தருணமாக இந்த நிகழ்வு அமைந்தது.
இதற்கிடையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல்” தொடர்பான பார்லிமென்ட் கூட்டுக்குழுவிற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தில் சமர்ப்பிக்க உள்ளது
