டெஹ்ரான்: ஈரானின் முக்கிய தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரானின் புதிய ஆட்சியாளர் அயதுல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகளுக்கு இடையே கடந்த 20 நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது.
அந்த தாக்குதலில் 67 வயதான அலி லாரிஜானி உயிரிழந்தார்; அவர் மறைந்த ஆட்சியாளர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஈரானின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.
இதுகுறித்து மொஜ்தபா கமேனி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் உரிய பழிவாங்கல் இருக்கும்; இந்தத் தியாகிகளின் கொலையாளிகள் விரைவில் அதற்கான விலையை செலுத்த நேரிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லாரிஜானி அறிவு, தொலைநோக்கு மற்றும் ஞானம் கொண்டவர்; இஸ்லாமிய அமைப்பின் பல்வேறு நிலைகளில் பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்றும் பாராட்டினார்.
இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் உயிரிழந்ததை ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் உறுதிப்படுத்தினார்.
அவரது மரணத்தை கோழைத்தனமான படுகொலை எனக் குறிப்பிட்ட அவர், அலி லாரிஜானி மற்றும் அஜீஸ் நசீர்சாதே உள்ளிட்டோரின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் மேற்கு ஆசியாவில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன.
