கோவை: “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆண்டுகள் கழித்து தமிழக மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது,” என தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், சரவணம்பட்டியில் கல்லூரி மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இன்னும் முழு தகவல் வெளியாகவில்லை என்றும், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டி, கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்; தமிழகத்தில் பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும் என தெரிவித்தார்.
அண்ணாமலை தனது உரையில், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 8,008 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகளுக்கு எதிராக 39,999 குற்றச்செயல்கள் நடந்துள்ளதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மார்ச் 10ஆம் தேதி விளாத்திகுளத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், தமிழகத்தில் மாதந்தோறும் கூட்டு பலாத்காரம் சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றும் கூறினார்.
பல பாலியல் வழக்குகளில் தி.மு.க. நிர்வாகிகள் தொடர்புடையவர்கள் எனவும், 7 மாதங்களாகியும் பொறுப்பு டி.ஜி.பி. பதவி நீடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
கோவைப்புதூரில் பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.பி. செந்தில்குமாரை முதலில் இடைநீக்கம் செய்தபோதும், பின்னர் பாதிக்கப்பட்டவரே கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
5 ஆண்டுகளில் 3.5 லட்சம் அரசு வேலை மற்றும் 5 லட்சம் தனியார் வேலை வழங்குவதாக கூறிய நிலையில், 43 ஆயிரம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் 65,518 கிலோ கஞ்சா மற்றும் 8,025 கிலோ செயற்கை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
டாஸ்மாக்கில் 1,495 கோடி பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு, பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் 14,950 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
கோவைக்கு தி.மு.க. அரசு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
