மதுரை: நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜூனா தெரிவித்த கருத்தை நடிகர் விஜய் கண்டிக்காதது ஏன் என்று பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வெற்றிக்கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், திமுக அரசு கடந்த சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டினார். 505 வாக்குறுதிகளில் சில மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், மக்கள் ஆதரவை பெற பல்வேறு திட்டங்கள் மூலம் கவரப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஓய்வூதிய திட்டம் குறித்தும் அவர் விமர்சனம் முன்வைத்து, “முன்பு முழுமையாக அரசு நிதி வழங்கிய நிலையில், தற்போது ஊழியர்களிடமிருந்து பங்களிப்பு பெறப்படுகிறது. புதிய அறிவிப்புகளுக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்தில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு குற்றங்கள் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை என்றும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்த தேர்தலில் பணபலத்திற்கு பதிலாக மக்களின் ஆதரவே வெற்றி பெறும்” என்றும், நடிகர் விஜயை பா.ஜ. மிரட்டுகிறது என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்
