கோவை: “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது” என்று பா.ஜ. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திமுக அரசை கண்டித்து கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டு திமுக அரசை கடுமையாக விமர்சித்தனர்.
முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியில்லை என்றும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டினார். சரவணம்பட்டியில் கல்லூரி மாணவி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்னும் வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறினார். “8,008 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2,080 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிராக 39,999 குற்றச்செயல்கள் நடந்துள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், பல பாலியல் வழக்குகளில் திமுக நிர்வாகிகள் தொடர்புடையதாகவும் குற்றம்சாட்டினார்.
அரசு வேலைவாய்ப்பு குறித்தும் அவர் விமர்சனம் முன்வைத்தார். “5 ஆண்டுகளில் 3.5 லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என கூறிய நிலையில், வெறும் 43 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், போதைப்பொருள் பரவல் அதிகரித்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 65,518 கிலோ கஞ்சா மற்றும் 8,025 கிலோ செயற்கை போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டாஸ்மாக் விற்பனை குறித்தும் குற்றச்சாட்டு முன்வைத்து, “1,495 கோடி பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
கோவைக்கு திமுக அரசு எந்த புதிய திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
