ஈரானின் ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்தவொரு கச்சா எண்ணெய் கப்பலும் செல்லக்கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், அதை மீறி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. ஆனால், பல நாடுகள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி அருகிலுள்ள ஈரான் கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருந்த ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் துல்லிய தாக்குதல் நடத்தியது.
சுமார் 5,000 பவுண்ட் எடையுள்ள ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டு, ஈரானின் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படையின் மத்திய தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஏவுகணைகள் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
