வாஷிங்டன்: வரலாற்றில் இதுவரை தாக்கிய எந்த நாட்டையும் விட ஈரான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 11 நாட்களில் அமெரிக்க ராணுவம் ஈரானை பெரிதும் சேதப்படுத்தியுள்ளது. அது ஒரு கடினமான நாடாக இருந்தாலும், அவர்களின் விமானப்படை முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. இந்த நடவடிக்கைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலான நேரம் எடுத்துக் கொண்டது.
ஈரானிடம் தற்போது ரேடார் வசதி இல்லை. விமான எதிர்ப்பு தளவாடங்களும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. அவர்களுடைய ஏவுகணைத் திறன் 90 சதவீதம் குறைந்துவிட்டது. ட்ரோன் திறன் 85 சதவீதம் குறைந்துள்ளது.
அவை தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளையும் பல இடங்களில் குண்டுவீசி அழித்துள்ளோம். இதுபோன்ற தாக்குதலை இதற்கு முன்பு யாரும் பார்த்ததில்லை.
மேலும் ஈரானிடம் தற்போது அணுசக்தி திறன் எதுவும் இல்லை. ‘மிட்நைட் ஹேமர்’ நடவடிக்கைக்கு பிறகு அங்கிருந்து வெளியேறினோம். அந்த நடவடிக்கை சில காலத்திற்கு அவர்களை முடக்கிவிடும் என நினைத்தோம். ஆனால் அவர்கள் மீண்டும் நடவடிக்கைகளை தொடங்கினர்.
அதனால் இந்த நடவடிக்கையை முழுமையாக முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெற வேண்டும் என்பதையும் எங்கள் நிர்வாகம் உறுதி செய்து வருகிறது.
கண்ணி வெடிகள்
ஈரான் கடலில் கண்ணி வெடிகளை பதிக்க முயன்றது. கப்பல்களை சேதப்படுத்தும் நோக்கில் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இரண்டு நாட்களில் 54 கப்பல்களை செயலிழக்கச் செய்ததாகவும் தகவல்கள் உள்ளன.
சர்வதேச எரிசக்தி முகமை உலக நாடுகளின் பெட்ரோலியக் கிடங்குகளில் இருந்து 400 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெயை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கை உலகளவில் எண்ணெய் விலையை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.
ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க ‘ஆபரேஷன் எபிக் ப்யூரி’ என்ற பெயரில் அமெரிக்கா தீர்க்கமான நடவடிக்கை மேற்கொண்டது என்றும் அவர் கூறினார்.
47 ஆண்டுகளுக்கு…!
இந்த நடவடிக்கை 47 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கடந்த 47 ஆண்டுகளாக அவர்கள் எங்கள் மக்களை தாக்கி வருகின்றனர்.
மத்திய கிழக்கு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவர்கள் முயற்சி செய்தனர். இதன் காரணமாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இந்த அளவிலான தாக்குதலை ஈரான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
