நமது நிருபர்-
மதுரை மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவிலில் திருப்பணி மேற்கொள்ள முயற்சிக்கும் நிலையில், அப்பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவிற்கு உட்பட்ட தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இரண்டு ஏக்கர் 40 செண்ட் நிலத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் கோவில் மற்றும் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் கோவில் திருப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில் பரம்பரை அறங்காவலர் மகேஸ்வரன் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில், கோவில் கட்டுமானம் நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கருப்பணசாமி திருக்கோவில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகியால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. கோவில் திருப்பணிக்கு மாநில மற்றும் மாவட்ட வல்லுநர் குழுவின் அனுமதி பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் கோவில் திருப்பணியை தடுக்க சாகுல் ஹமீது என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் கோவில் திருப்பணிக்கு அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை கடந்த ஜனவரி மாதத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதன் பின்னர் கோவில் திருப்பணிக்கு தொடர் பாதுகாப்பு வழங்க கோரி மீண்டும் வழக்கு தொடரப்பட்டு, கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த இரண்டு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் கோவில் திருப்பணி நிறைவு பெற்று கும்பாபிஷேகம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது: பழமையான கோவில் அருகே சுமார் 100 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கோவில் திருப்பணியை மேற்கொள்ள சமீபத்தில் கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
அப்போது “இந்த கோவிலை சீரமைக்கக் கூடாது; வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்” எனக் கூறி, அப்பகுதி முஸ்லிம்கள் கோவிலுக்குள் நுழைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து செல்லச் செய்தனர். அவர்களின் எதிர்ப்பு காரணமாக கோவில் திருப்பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
ஹிந்துக்கள் அந்த பகுதியில் சிறுபான்மையாக இருப்பதால் முஸ்லிம்கள் தடுப்பது நியாயமானது அல்ல என்றும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் திருப்பணியை தடுக்க முயல்வது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும், இதில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் திருப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி முஸ்லிம்கள் கோவிலுக்குள் நுழைந்து போராட்டம் நடத்தியது அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதி ஹிந்து மக்கள் கோவில் நலனுக்காக எந்த முயற்சி எடுத்தாலும் முஸ்லிம்கள் தடையாக இருக்கின்றனர். அருகில் மசூதி இருப்பதால் கோவில் கட்டக் கூடாது எனக் கூறுகின்றனர். அந்த பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது சரியானது அல்ல.
-
ராம ரவிக்குமார், தலைவர், இந்து தமிழர் கட்சி
