சென்னை: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், விரைவில் நிலைமை இயல்புநிலைக்கு திரும்பும் என்றும் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது: இந்தியாவிற்கு வரும் எல்பிஜி பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. போர் தொடங்கிய பிறகு ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் எந்த கப்பலும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பெட்ரோலிய பொருட்களை மத்திய அரசு வாங்கி வருகிறதாலும், எல்பிஜி காஸ் பெரும்பாலும் சவுதியிலிருந்து தான் வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதி விரைவில் இயல்புநிலைக்கு வந்தவுடன் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கும். வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை முன்பதிவு செய்ய முன்பு 21 நாட்கள் இடைவெளி இருந்த நிலையில், போர் சூழ்நிலையை தொடர்ந்து மத்திய அரசு அதை 25 நாட்களாக உயர்த்தியுள்ளது.
வீட்டு பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெட்ரோலிய பொருட்களில் சுமார் 60 சதவீதம் இறக்குமதியே ஆகும் என்றும் அவர் கூறினார்.
மக்கள் யாரும் தேவையற்ற அச்சத்தில் இருக்க வேண்டாம். மிக விரைவில் நிலைமை இயல்புநிலைக்கு திரும்பும். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து தேவையில்லாத அச்சத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சாட்சியம் அளித்த பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் பேசியார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த சம்பவத்தின் போது பாஜ சார்பில் நிவாரணமும் ஆறுதலும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
அந்த சம்பவத்தில் பாஜ சம்பந்தப்பட்டுள்ளதாக ஆர்.எஸ். பாரதி கூறியதற்கு எதிராக மன்னிப்பு கோரி கடிதம் அனுப்பியதாகவும், மேலும் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக சாட்சியங்கள் வழங்கியதாகவும் அவர் கூறினார்.
மேலும் கடந்த முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது திமுக எம்.பி. டி.ஆர். பாலு தன் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், அதனால் அவர்மீதும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
