சென்னை: தவெக தலைவர் விஜய் வெளியிட்ட மகளிர் சார்ந்த வாக்குறுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்து சீமான் கூறியதாவது: தவெக வெளியிட்டுள்ள மகளிர் சார்ந்த அறிவிப்புகள் போன்ற முறையை நான் வெறுக்கிறேன்; அருவருக்கிறேன். இது ஒரு ஆட்சி முறை அல்ல, இது ஒரு வியாபாரம் போன்றது. மக்கள் ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம் என்று கூறும் தள்ளுபடி திட்டங்களைப் போல அரசியல் திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
ஏற்கனவே மாநிலத்திற்கு 10.5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. அதற்கு மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படுகிறது. இப்படியே தாலிக்கு தங்கம் இலவசம், இது இலவசம், அது இலவசம் என்று அறிவித்துக் கொண்டே சென்றால், இறுதியில் நாடு ஒருநாள் ஏலத்திற்கு வரும் நிலை உருவாகும்.
மதுவை ஒழிப்பேன் என்று சொல்ல முடியாத நிலையில், சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவது வெறும் வெட்டிப் பேச்சு என்றும் அது ஏமாற்றுப் பேச்சு என்றும் அவர் கூறினார். விஜய்க்கு தனித்த தத்துவம், கோட்பாடு அல்லது தெளிவான அரசியல் பாதை எதுவும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மகளிருக்கு மாதம் 2,500 ரூபாய் வழங்கும் திட்டம் திரைப்பட காமெடி போல ‘FLOP’ ஆகிவிடும் என்றும் அவர் கூறினார். சினிமா வேறு, சித்தாந்தம் வேறு; இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்தார்.
இலவசமாக வழங்கப்படும் எந்த பொருளும் பொறுப்பற்றதாக மாறிவிடும். அதன் மதிப்பு குறைந்து விடும். தாய்பாலும், தண்ணீரும் எளிதாக கிடைப்பதால் அவற்றின் அருமையை நாம் மதிக்காமல் விடுகிறோம். பூமி காலடியில் இருப்பதால் அதையும் நாம் மதிப்பதில்லை.
ஆனால் அறிவை வளர்க்கும் கல்வியும், உயிரை காக்கும் மருத்துவமும் மட்டுமே அனைவருக்கும் சமமாக கிடைக்கும் வகையில் இலவசமாக இருக்க வேண்டும் என்று சீமான் கூறினார்.
