வாஷிங்டன்: ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆலோசித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்ரேல் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: இஸ்ரேலை அழிக்க முயன்ற ஈரான் தன்னை சுற்றியுள்ள நாடுகளையும் அழிக்க திட்டமிட்டது. அதனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து செயல்பட்டுள்ளோம். இஸ்ரேலை அழிக்க நினைத்த நாட்டை தாக்கி பலவீனப்படுத்தியுள்ளோம்.
போரை நிறுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பரஸ்பரம் பேசி முடிவு செய்யப்படும். சரியான நேரத்தில் போர் நிறுத்தம் குறித்து நான் முடிவு செய்வேன். அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு அந்த முடிவு எடுக்கப்படும்.
அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு இஸ்ரேல் தனியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் இருக்காது என நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல் தற்போது இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த போர் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை நீடிக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகை முன்பே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் தெளிவான பதிலை அளிக்கவில்லை.
மேலும் தனது பேட்டியில் லஞ்சம் மற்றும் மோசடி வழக்குகளில் சிக்கியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்காத இஸ்ரேல் அதிபர் இசாக் ஹெர்சோக்கை டிரம்ப் விமர்சித்தார்.
நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். போரில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவது தவறு என்று அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இஸ்ரேல் அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், இஸ்ரேல் சட்டத்தின் ஆட்சியில் இயங்கும் இறையாண்மைமிக்க நாடு என்றும், மன்னிப்பு கோரிக்கை நீதித்துறை அமைச்சகம் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
