காத்மாண்டு: நேபாள அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக இளம் தலைமுறையினர் புதிய அரசியல் அலையை உருவாக்கியுள்ளனர். அந்த மாற்றத்தின் பிரதிநிதியாக களமிறங்கிய ‘ராப்’ பாடகர் பாலேந்திர ஷா (35) தலைமையிலான ஆர்.எஸ்.பி. (தேசிய சுதந்திர கட்சி) நேரடி தேர்தல் நடைபெற்ற 165 தொகுதிகளில் 125 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் விரைவில் நேபாளத்தின் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
நேபாளத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 26 அன்று சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்தது. ஏற்கனவே ஊழல் மற்றும் வேலையில்லா பிரச்சினைகள் குறித்து அதிருப்தியில் இருந்த இளைஞர்கள் இதற்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறி 76 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அந்நாட்டு பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
பின்னர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுசீலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி நேபாள பார்லிமென்டிற்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர்களான கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் யு.எம்.எல்., கட்சி மற்றும் புஷ்ப கமல் தாகல் பிரசண்டாவின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி. கட்சியும் போட்டியிட்டது.
நேபாள பார்லிமென்டில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 110 இடங்கள் கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் விகிதாச்சார முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்த தேர்தலில் நேரடி தொகுதிகளில் 165ல் 125 இடங்களை கைப்பற்றி ஆர்.எஸ்.பி. கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மேலும் 25 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் எந்தவையும் 10 லட்சம் வாக்குகளைத் தாண்டவில்லை.
பெரும்பான்மைக்கு 138 இடங்கள் தேவைப்படும் நிலையில், விகிதாச்சார முறையிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களை ஆர்.எஸ்.பி. பெறும் வாய்ப்பு உள்ளது. இதனால் பாலேந்திர ஷா நேபாளத்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளார். நேபாள பார்லிமென்ட் வரலாற்றில் இளம் வயதில் பிரதமராகும் தலைவராக அவர் உருவெடுத்துள்ளார்.
இந்த தேர்தலில் ஜாபா–5 தொகுதியில் போட்டியிட்ட பாலேந்திர ஷா, முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். மேலும் முன்னாள் பிரதமர் மாதவ் நேபாளும் ஆர்.எஸ்.பி. வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்த தேர்தலில் 10 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் 9 பேர் ஆர்.எஸ்.பி. கட்சியைச் சேர்ந்தவர்கள். பாரம்பரிய கட்சிகளான நேபாள காங்கிரஸ் 17 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் யு.எம்.எல். 7 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி மற்றும் அரசியலில் மாற்றம் போன்ற கோரிக்கைகள் இளம் தலைமுறையினரால் முன்வைக்கப்பட்டன. அதனால் புதிய வாக்காளர்களிடையே ஆர்.எஸ்.பி. கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்ததாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
