பீஜிங்: ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரானும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் ஒன்பதாவது நாளாக தொடர்ந்த நிலையில், அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இதுகுறித்து சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வாங் யீ கூறியதாவது:
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் ஏற்பட்ட இந்த போர் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது.
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
போர் நிறுத்தப்பட்டு உடனடியாக சுமுகமான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். உலகம் மீண்டும் காட்டாட்சி நிலைக்கு திரும்பக் கூடாது.
மேலும் இந்த ஆண்டு சீனா–அமெரிக்கா உறவுகளுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவுடனான வேறுபாடுகளை அமெரிக்கா சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிக்கலான சர்வதேச சூழ்நிலையிலும் சீனா–ரஷ்யா உறவு உறுதியானதாகவும் அசைக்க முடியாததாகவும் தொடர்கிறது என்று வாங் யீ கூறினார்.
