சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது மக்களிடம் கேட்கப்பட உள்ள 33 கேள்விகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு முறையாக சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, 2027ம் ஆண்டு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் கட்ட பணியாக வரும் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் மாதம் வரை வீடுகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இதற்கிடையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள் மற்றும் சின்னங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகப்படுத்தியுள்ளார். டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நிலையில், இதற்காக 4 டிஜிட்டல் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் அரசின் கூடுதல் செயலர் ரீடா ஹரீஸ் தாக்கூர் வெளியிட்ட உத்தரவின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான Self Enumeration பணிகள் வரும் ஜூலை 17 முதல் 31 வரை 15 நாட்கள் நடைபெற உள்ளன.
மேலும் வீடுகள் பட்டியலிடும் பணிகள் ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை நடைபெற உள்ளன. இந்த முதற்கட்ட கணக்கெடுப்பு பணிகளின் போது மக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகள் குறித்த விவரங்களும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் விவரம்
-
கட்டட எண் (நகராட்சி அல்ல உள்ளாட்சி அல்லது மக்கள் தொகை கணக்கு எண்)
-
மக்கள் தொகை கணக்கு வீட்டு எண்
-
கட்டடத்தின் தரையின் பிரதான தளம்
-
சுவரின் பிரதான கட்டுமான பொருள்
-
வீட்டு கூரையின் கட்டுமான பொருள்
-
வீட்டின் பயன்பாடு
-
வீட்டின் தற்போதைய நிலைமை
-
வீட்டு எண்
-
வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை
-
குடும்ப தலைவரின் பெயர்
-
அவரின் பாலினம்
-
குடும்ப தலைவர் பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / பிற இனத்தை சேர்ந்தவரா
-
வீட்டின் உரிமையாளர்
-
அறைகளின் எண்ணிக்கை
-
வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை
-
குடிநீருக்கான பிரதான ஆதாரம்
-
குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்
-
விளக்குக்கான பிரதான ஆதாரம்
-
கழிப்பிட வசதி
-
கழிப்பிட வசதியின் வகை
-
கழிவுநீர் வெளியேற்றும் இணைப்பு
-
குளிக்கும் வசதி
-
சமையலறை வசதி மற்றும் எல்பிஜி / பிஎன்ஜி இணைப்பு
-
சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்
-
வானொலி / டிரான்சிஸ்டர் உள்ளதா
-
டிவி உள்ளதா
-
இணையதள வசதி உள்ளதா
-
மடிக்கணினி / கம்ப்யூட்டர் உள்ளதா
-
தொலைபேசி / மொபைல் போன் / ஸ்மார்ட்போன் உள்ளதா
-
மிதிவண்டி / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபட் உள்ளதா
-
கார் / ஜீப் / வேன் உள்ளதா
-
குடும்பத்தினர் எடுத்துக்கொள்ளும் முக்கிய உணவு என்ன
-
மொபைல் எண் (மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக மட்டும்)
