நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் பயங்கரவாத சம்பவமாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் இரண்டு நாட்களுக்கு முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
படுகாயம் அடைந்த மூவர் சம்பவத்தன்று உயிரிழந்த நிலையில், காயமடைந்திருந்த மற்றொருவர் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த நால்வரில் ஒருவர் 21 வயதான இந்திய மாணவி சவிதா சண்முகசுந்தரம் என தெரியவந்துள்ளது. கூட்டம் அதிகமாக இருந்த பொழுதுபோக்கு பகுதியில் திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த மாணவி சவிதா சண்முகசுந்தரம் இன்னும் சில மாதங்களில் தனது பட்டப்படிப்பை முடிக்க இருந்ததாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் பொருளாதாரம், நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரட்டை பட்டப்படிப்புகளை படித்து வந்தார்.
ஆஸ்டின் மெக்கோம்ப்ஸ் வணிகக் கல்லூரியில் கல்வி பயின்ற அவர், படிப்பில் மிகவும் திறமையான மாணவியாக இருந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர்.
