துபாய்: ஈரான் விடுத்த எச்சரிக்கை காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு, 700க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் முக்கிய கடல் பாதையாகும். இந்த வளைகுடாவைச் சுற்றி ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் குவைத் போன்ற நாடுகள் அமைந்துள்ளன.
இந்த நாடுகள் உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய் பெரும்பாலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தினசரி சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் இந்த கடல் பாதை வழியாக கடத்தப்படுகிறது.
இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் போன்ற நாடுகளின் விமான தளங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எந்த கப்பலையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் விளைவாக கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடல் போக்குவரத்து ஆய்வு நிறுவனங்களான விண்ட்வர்ட் மற்றும் கெப்லர் தெரிவித்துள்ளன.
அந்த நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 1ம் தேதி ஹார்முஸ் வழியாக மூன்று கப்பல்கள் மட்டுமே 28 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் கொண்டு சென்றன. இது வழக்கமான தினசரி சராசரி அளவான 1.98 கோடி பேரல்களுடன் ஒப்பிடுகையில் 86 சதவீத குறைவாகும்.
நேற்று அதிகாலை வரை ஒரு சிறிய எண்ணெய் கப்பலும் ஒரு சரக்கு கப்பலும் மட்டுமே அந்த வழித்தடத்தை கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தியின் இருபுறங்களிலும் 706 எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலை உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்து பேரல் ஒன்றின் விலை 80 டாலரை எட்டியுள்ளது.
மேலும் சவுதி அரேபியாவின் ராஸ் தனுரா பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கத்தார் எரிவாயு நிலையம் மீது தாக்குதல் நடந்ததை தொடர்ந்து ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலை 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலை நீண்ட நாட்கள் தொடர்ந்தால் ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து மாற்று எரிசக்தி ஆதாரங்களை தேட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மேற்கு ஆசிய நாடுகளின் கச்சா எண்ணெய் மீது அதிகமாக சார்ந்துள்ள சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் இதனால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
