மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், மாவட்ட கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய நிலையில், நீதிமன்றம் நியமிக்கும் ஐந்து பேர் கொண்ட குழுவை மலை உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அந்த உத்தரவு நடைமுறைக்கு வராததால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கலெக்டர் பிரவீன் குமார், போலீஸ் கமிஷனர் மற்றும் கோவில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை கோரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் கலெக்டர் நேரில் ஆஜராகி தனது பதிலை விளக்கினார்.
அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கிறேன் என்றும், திருப்பரங்குன்றத்தில் அதிகமான மக்கள் திரண்டதால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கையால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
அந்த தடை உத்தரவு நீதிமன்ற உத்தரவை மீறியதாக கருதப்பட்டால், அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஹிந்துக்கள் தொடர்புடைய மலை உச்சி பகுதியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணையின் போது ஐந்து பேர் மட்டும் மலை உச்சிக்கு சென்று குறுகிய நேரம் பூஜை செய்ய அனுமதி வழங்கினால் போதுமானது என நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிமன்றம் நியமிக்கும் ஐந்து பேர் கொண்ட குழுவை தீபத்தூண் அருகே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், இதுகுறித்த அரசின் நிலைப்பாட்டை மார்ச் 4ம் தேதி மாலை 4 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மற்றும் அறங்காவலர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
