ஜெருசலேம்: ஈரான் மீது நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் ஈரான் ஆட்சியாளர் அயதுல்லா கமேனி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலடியாக லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் படைகள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
