திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று மாலை சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வாசலில் அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தை முன்னிட்டு கோவிலில் விரிவான பாதுகாப்பு மற்றும் தூய்மை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவில் வளாகத்தின் பல இடங்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டன. மண்டபங்கள் அனைத்திலும் சுத்தம் செய்யப்பட்டு, வாட்டர் வாஷ் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கோவில் துாண்களில் உள்ள கற்சிலைகளுக்கு எண்ணெய் காப்பு சாத்துப்படி செய்யப்பட்டது. கோவில் நுழைவாயில் முதல் மூலஸ்தானம் வரை சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி, வாசலில் கூடியிருந்த பொதுமக்களை நோக்கி கையசைத்தார். பின்னர் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். அவரது தரிசனத்திற்குப் பிறகு மாலை 6 மணி முதல் பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.
