மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில், நிகழ்ச்சி நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஈ.வெ. ராமசாமி படத்தைச் சுற்றி சர்ச்சை எழுந்தது.
மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் இந்த கூட்டத்திற்காக கடந்த ஒரு வாரமாக மேடை மற்றும் நுழைவாயில்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. கூட்டணி கட்சியினரின் வருகைக்காக நான்கு பிரமாண்ட நுழைவாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அதில் முதல் நுழைவாயிலில் ஈ.வெ. ராமசாமி படம் வைக்கப்பட்டிருந்தது. அடுத்த நுழைவாயில்களில் மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. மேடைப்பகுதியில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.
ஈ.வெ. ராமசாமி படத்தை வைப்பது குறித்து சில தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்தன. தகவல் பொதுவெளியில் பரவியதையடுத்து, அந்த படம் உடனடியாக அகற்றப்பட்டது.
ஏற்பாட்டாளர்கள் விளக்கமளிக்கையில், திராவிட இயக்க தலைவர்களில் ஒருவராக இருப்பதால் படம் வைக்கப்பட்டதாகவும், விமர்சனங்கள் கிளம்பியதால் அதனை அகற்றியதாகவும் தெரிவித்தனர். தற்போது அந்த இடத்தில் பா.ஜ. சின்னமான தாமரை படம் வைக்கப்பட்டுள்ளது.
