தஞ்சாவூர்: கும்பகோணத்தில் நடைபெற்ற மாசிமக விழாவையொட்டி மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 21ஆம் தேதி பல சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வாக ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 11 சிவன் கோவில்களிலிருந்து பஞ்சமூர்த்திகள் மகாமக குளக்கரைக்கு வந்தடைந்தனர்.
கம்ட விஸ்வநாதர் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டிருந்ததால் அந்த கோவில் சுவாமி மகாமக குளத்திற்கு வரவில்லை.
பின்னர் மகாமக குளத்தில் அஸ்திர தேவருக்கு பல்வேறு மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு செய்தனர்.
மேலும் மகாமக குளக்கரையில் மற்றும் பிற நீர்நிலைகளில் பலர் தங்களது முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்தனர்.
இதனுடன் மாசிமக விழாவின் ஒரு பகுதியாக சக்கரபாணி சுவாமி கோவிலில் தேரோட்டமும் நடைபெற்றது. சுதர்சனவல்லி மற்றும் விஜயவல்லி தாயார்களுடன் சக்கரபாணி சுவாமி, பாமா ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி, அம்புஜவல்லி தாயார் சமேத ஆதிவராகப் பெருமாள் ஆகிய சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
அதேபோல் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவிலில் பெருமாள் உபயநாச்சியார்களுடன் வீதியுலா நடைபெற்றது. பின்னர் ஹேமபுஷ்கரணி எனப்படும் பொற்றாமரை குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி தெப்ப உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது.
