கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 63 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்கத்தில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கமிஷன் எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொண்டது. இந்த நடவடிக்கைக்கு ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது.
திருத்தப் பணிக்கு முன் 7.66 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவு பட்டியலில் 58 லட்சம் பேர் நீக்கப்பட்டு எண்ணிக்கை 7.08 கோடியாக குறைந்தது. இறுதி பட்டியல் வெளியீட்டின் போது, இடமாற்றம், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் 63 லட்சம் பேர் நீக்கப்பட்டதால், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.04 கோடியாக சரிந்துள்ளது.
மேலும், “தர்க்க ரீதியான முரண்பாடுகள்” உள்ளதாகக் கூறி 60 லட்சம் பேரின் பெயர்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மாவட்ட நீதிபதிகள் துணைப்பட்டியல் வெளியிடுவர் என தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள நாடியா மாவட்டத்தில் அதிகபட்சமாக 2.73 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
முதல்வர் மம்தா பானர்ஜி பிரதிநிதித்துவம் செய்யும் பவானிபூர் தொகுதியில் 47,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். முன்பு 2,06,295 வாக்காளர்கள் இருந்த நிலையில், தற்போது 1,59,295 பேர் மட்டுமே உள்ளனர். மேலும் 14,154 பேரின் பெயர்கள் ஆய்வில் உள்ளன. கடந்த தேர்தலில் 58,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த மாற்றம் அடுத்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.
