இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் தற்போது கடுமையான மோதலாக மாறியுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையே நடந்துவரும் தாக்குதல்களில், ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் பின்னர், தலிபான் ஆட்சியை பிடித்தது. அதன் பின் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மீண்டும் செயல்படத் தொடங்கியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், டிடிபி பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆப்பரேஷன் கஜப் லில் ஹக்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவம் காபூல், கந்தஹார், பக்டியா, நங்கர்ஹார், ஜலாலாபாத் உள்ளிட்ட நகரங்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18 பொதுமக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலடியாக தலிபான் படைகள், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 53 இடங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது. இதில் 55 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும், சில ராணுவ முகாம்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடன் பகிரங்க போர் நிலை உருவாகியுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் 331 தலிபான் ராணுவத்தினர் மற்றும் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் 104 சோதனைச் சாவடிகள், 163 டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தலிபான்களுக்கு ஆதரவாக டிடிபி அமைப்பினர் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் புதிய தாக்குதலை தொடங்கினர். பெஷாவர், பன்னு, புத்பெர், நவ்ஷேரா, வடக்கு வாசிரிஸ்தான் மற்றும் கோஹாட் உள்ளிட்ட நகரங்களில் போலீஸ் நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 7 போலீசார் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலர் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்கள், இரு தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக போர் நிறுத்தம் அறிவித்து அமைதி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
