லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு நான்கு நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ரூ.2.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களும் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அவர் அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லாரன்ஸ் வாங் மற்றும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சிங்கப்பூர் பயணத்தின் போது மட்டும் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் இறுதி செய்யப்பட்டன. இத்திட்டங்கள் மூலம் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் பயணத்தின் போது, ரூ.90 ஆயிரம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் உறுதி செய்யப்பட்டன. யமனாஷி பல்கலைக்கழகம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து, உபியில் பசுமை ஹைட்ரஜன் சிறப்பு மையம் தொடங்க தீர்மானிக்கப்பட்டது.
இந்த பயணம் உபியின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய முன்னேற்றமாக இருக்கும் என கூறிய முதல்வர், 2029–30 நிதியாண்டிற்குள் 1 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார இலக்கை அடைவதில் இது முக்கிய மைல்கல்லாக அமையும் என்றார்.
